*இஷா தொழுகை*
இஷா தொழுகை
நம்மை படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நாம் நமது விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டோமா !
இவ்வுலகில் நாம் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி.
அவ்வேளை நாம் சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி நம்மால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.
தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ!
அல்லாஹ் சொல்கின்றான்...
நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை. (நிஸாஃ 142ம் வசனம்)
நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!
"ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும்.
நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.
அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!...
யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)
ஆகவே நண்பா! நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்!. இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே!
போதும் நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை குறிப்பாக பஜ்ர் தொழுகையை தவற விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் . (அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா?
தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான். (ஸூரா அல் ஹதீத் 53)
Comments
Post a Comment