குர்பானியின் சட்டங்கள்
குர்பானி யார் மீது கடமை?
அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வழங்கியிருக்கிற இபாதத் எனப்படும் வணக்க, வழிபாடுகளின் பிண்ணனியில் வாழ்க்கைக்கான அழுத்தமான பாடங்களும், படிப்பினைகளும் இடம் பெற்றிருக்கும்.
அந்த இபாதத்தை அதன் மிகச்சரியான கோணத்தை அறிந்து கொண்டு, செயல் வடிவம் கொடுத்து அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பது தான் இபாதத் என்பதின் அடிப்படையான அம்சமாகும்.
குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகியவணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும்
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃஅபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை விரைவில் (இன்ஷா அல்லாஹ்) அடைய இருக்கிறோம்.
இந்த துல்ஹஜ் மாதமானது ஹஜ் செய்யக்கூடியவர்களுக்கு மட்டும் வணக்கத்திற்குரிய மாதமல்ல! நபி இப்ராஹீம்(அலை) மற்றும் அவர்களின் மைந்தரான இஸ்மாயீல்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்துப் பலியிடும் ஒரு வணக்கத்தை நிறைவேற்றும் "ஈதுல் அள்ஹா" என்று சொல்லப்படும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமாகும். எனவே, இந்த துல்ஹஜ் மாதத்தில் "குர்பானி"என்று சொல்லப்படும் 'அறுத்துப் பலியிடுதல்' பற்றி இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.
இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில்"உள்ஹியா" எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது.
"உமது இறைவனுக்காக தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!" (அல்குர்ஆன் 108:2)
நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு, அது இறைக் கட்டளை என்பதையுணர்ந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். அப்போது இறைக் கட்டளைக்கு உடனே அடிபணியும் அவர்களின் பணிவையும் தியாகத்தையும் இறைவன் ஏற்றுக்கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாற்று நிகழ்ச்சி திருக்குர்ஆனில் 37:102- 108 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில்"பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டுவைத்தோம்"என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
குர்பானி என்றால் என்ன ?
குர்பானி என்றால் “மா யதகர்ரபு பிஹி இலல்லாஹ்“ எந்தச் செயலைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்க முடியுமோ அச்செயலுக்கு குர்பானி எனப்படும். இது பிராணிகளை அறுத்துப் பலியிடுவதாகவோ, ஏனைய வணக்கங்களாகவோ, தானதர்மங்களாகவோ இருக்கலாம்.
குர்பானி என்றால் தியாகம் செய்தல். நெருங்குதல் என்று பொருள்.நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்துஅல்லாஹ் நமக்கு அளித்துள்ள செல்வங்களுக்கு நன்றி செலுத்தும்வகையில் அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடி தூய எண்ணத்துடன்பிராணிகளை அறுக்கும் அற்புதக்கடமைதான் குர்பானி என்பது.
ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி கடமையாக்கப்பட்டது. ஹனபி மத்ஹபின் படி குர்பானி கொடுத்தல் வாஜிபாகும். இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும்.
துல்ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன்ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்ததிலிருந்து ஹனபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை 12.ம் நாள் சூரியன் மறையும் வரை..
ஷாபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை 13 ம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹ்விற்காக ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடுவதற்கு “குர்பானி” என்று பெயர் . இதே பொருளில் தான்“உழ்ஹிய்யா” என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக ! அல் குர்ஆன் 108:3 என்று அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்
குர்பானி பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலம் தொடுத்து நடைபெறுகிறது. ஆனால் உழ்ஹிய்யா கலீலுல்லாஹ் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமே நிலை நிறுத்தப்பட்டது .எனவே உழ்ஹிய்யா இப்றாஹீம் நபியவர்களது சுன்னத்தாகவும் அமைந்துள்ளது.
குர்பானி யார் மீது கடமை?
ஹனபி மத்ஹபின் படி குர்பானி கொடுத்தல் வாஜிபாகும். இருநூறு திர்ஹம் அதாவது ஏறத்தாழ 612.5 கிராம் வெள்ளியின் கிரயத்திற்குபெறுமான பொருளுக்கு குடியிருக்கும் வீடு, அணியும் ஆடை, கடன்கள்போக (எந்தப் பொருளாக இருந்தாலும், நிலமாகஇருந்தாலும், கால்நடையாக இருந்தாலும்) அவன் மீது குர்பானி வாஜிபாகும். (பெண்ணாக இருந்தாலும் சரி, சிறியவனாக இருந்தாலும் சரி
இமாம் ஷாபிஈ மத்ஹபின் படி இத்தினங்களுக்குரிய செலவினங்கள் போக குர்பானி கொடுக்க சக்தியுள்ளவனுக்கு குர்பானி சுன்னத்தே முஅக்கதாவாகும்.
குர்பானி ஒவ்வொரு நபரின் மீதும்கடமையா.? ஒருவீட்டில் எத்தனை பேரிடம் ஜகாத்கடமையாகும் அளவு பொருள்இருக்குமோ அவர்கள் அனைவரின் மீதும் தனித்தனியாக குர்பானி கொடுப்பது கடமையாகும். ஒரு குர்பானி அனைத்து நபர்களுக்கும் போதுமாகாது. நூல். ஷாமீ. 26/ 236
குர்பானியின் சிறப்பு
குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்றவேண்டும். ஏழ்மைப்பட்டவர்கள் மீது கடமையில்லை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் வசதி இருக்கிறதோ இல்லையோ, மற்ற தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் சிலர் , குர்பானி போன்றவற்றுக்கு மட்டும் ரொம்ப யோசனை செய்வார்கள். எனவே இதுபோன்ற விஷயத்தில் தங்கள் மீது இது கடமையாகிவிட்டதா, இல்லையா என்பதை அவரவர் மனசாட்சியுடன் முடிவு செய்துக் கொள்வதே நல்லது. அதே சமயம் உண்மையிலேயே வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டுமென்பது அவசியமல்லாத ஒன்று.
நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்த வணக்கங்களில் "குர்பானி" கொடுப்பது என்பதும் ஒரு வணக்கமாகும்.
குர்பானியின் முக்கியத்துவம்
பல நாட்கள் சாப்பிட வசதியில்லாத நிலையில் இருந்த நம்முடைய நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து குர்பானி கொடுத்ததாக ஹதீஸில் வந்துள்ளது.
وعن عبد الله بن عمر رضي الله عنهما قال: أقام النبي صلى الله عليه وسلم بالمدينة عشر سنين يضحي. رواه أحمد والترمذي وقال: حديث حسن (4) .
நபி (ஸல்) அவர்கள் மதினாவில் தங்கிய பத்து ஆண்டுகளும் குர்பானி கொடுத்தார்கள் என்று அப்துல்லா இப்னு உமர் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள். நூல்.திர்மிதி. அஹ்மத்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அவர்களுடைய 100ஒட்டகத்தில் 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்துள்ளார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அறுக்கும் படி கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளை சமைத்து சாப்பிட்டதாக இடம் பெற்றுள்ளது. நூல் : முஸ்லிம் (2137
பெருநாளின் மிக உன்னத அமல்
عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ، إِنَّهُ لَيَأْتِي يَوْمَ القِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا، وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسًا.
“மிகச் சிறந்த நாளில் மனிதன் செய்கின்ற நற்செயல்களில் இறைவனுக்கு விருப்பமானது குர்பானி கொடுப்பதாகும். நிச்சயமாக குர்பானி அதன் முடிகள், கொம்புகள், குளம்புகளுடன் கியாமத் நாளில் குர்பானி கொடுத்தவனைத் தேடி வருகிறது. அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னர் அல்லாஹ்வை அடைந்து விடுகிறது.“ அறிவிப்பவர் : ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நூல் : திர்மிதி . இப்னு மாஜா. 3126
وَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: فِي الأُضْحِيَّةِ لِصَاحِبِهَا بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ وَيُرْوَى بِقُرُونِهَا.
“குர்பானி கொடுக்கப்படுகின்ற பிராணிகளின் ஒவ்வொருரோமத்திற்கு(ப் பகரமாக) ஒரு நன்மையை அல்லாஹ் வழங்குகிறான். (நூல் :திர்மிதி.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
யார் குர்பானி கொடுக்க சக்தியிருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய ஈத்காவிற்கு அருகிலும் வரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல். இப்னு மாஜா. 3123
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?*
மூன்று கருத்துக்கள் நிலவுகிறது...
1-தாராளமாக கொடுக்கலாம் அதன் நன்மை அவர்களுக்கு போய் சேரும்.. இது ஹனஃபி, ஹம்பளீ மத்ஹபின் ஆய்வாகும்...
2-மரணித்தவர் வஸிய்யத் செய்திருந்தால் அது நிறைவேறும் இல்லையானால் கூடாது
இது ஷாஃபிஈ மத்ஹபின் ஆய்வாகும்...
3- மரணித்தவர்களுக்காக குர்பானி கொடுப்பது விரும்பத்தகாத வெறுக்கத்தக்கச் செயலாகும் இது மாலிகீ மத்ஹபின் ஆய்வாகும்..
இறுதியாக *ஃபதாவா ரஹீமிய்யா (2/86) வில்* குர்பானி நாட்களில் மய்யித்திற்காக ஸதகா செய்வதை விட அவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது மிக ஏற்றமான செயலாகும்...
தற்போது, குர்பானி சம்பந்தமாக நம்மிடையே ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றது. அப்படியான சந்தேகங்களுக்கும்,காலம் காலமாக நம்முடைய மக்களும் குர்பானி சம்பந்தமாககடைபிடித்துக் வருகின்ற சில மூடப்பழக்க வழக்கங்களுக்கும்அஹ்லுல் ஃபிக்ஹ் சட்ட மேதைகள் வழங்கியிருக்கின்ற தீர்வுகள்என்ன என்பதை பார்த்து நாம் தெளிவு பெறுவதற்கு கடமைப் பட்டுஇருக்கின்றோம்.
குர்பானி பிராணிகள் தன்மை
ஹனபி மத்ஹபின் படி ஆடு, மாடு, ஒட்டகம் . ஐந்து வயது நிறைந்த ஒட்டகமும், இரண்டு வயது நிறைந்த மாடு, வெள்ளாடும், ஒரு வயது செம்மறிஆடும். ஆறு மாத செம்மறி ஆடு பார்ப்பதற்கு கொழுத்ததாக இருந்தால் குர்பானி கொடுப்பதற்குத் தகுதியானவையாகும். இதற்குக் குறைந்த வயதுள்ள பிராணிகளை குர்பானி கொடுப்பது கூடாது.
(ஷாபிஈ மத்ஹபின் படி. ஒட்டகம் ஐந்து வயது மாடும் வெள்ளாடும் இரண்டு வயது செம்மறிஆடு ஒரு வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும்
குர்பானி பிராணிகள் நல்லதிடகாத்திரமானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும்இல்லாததாக இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, கண்பார்வைக் குறைவு, நோய் ,எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை, வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத்தெரியாதவை , மூக்குதுண்டிக்கப்பட்டவை, மடிதுண்டிக்கப்பட்டவை பலவீனமானவைகள், வால், காது அறுந்தவை, கண் பொட்டையானவற்றைக் ஆகிய குறைபாடுகளுடையவற்றை குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா (ரலி), நூல்கள்: திர்மிதி (1530), அபூதாவூத்,நஸயீ, இப்னுமாஜா (3144).
*குர்பானி பிராணியை எடை போட்டு வாங்கலாமா?*
பதில்:குர்பானி பிராணி எடைபோடப்படும் பொருளல்ல.. எனவே பிராணியை எடை போட்டு வாங்கக்கூடாது ஷரீஅத் அடிப்படையில் விலை பேசியே வாங்க வேண்டும்...
கூட்டுச் சேர்ந்து கொடுத்தல்:
மாடு ஒட்டகம் ஏழுநபருக்கோ அல்லது அதைவிடக் குறைந்தவர்களுக்காகவோ கொடுக்கலாம்.
ஏழு பேர்களும்அல்லாஹ்வின் பொருத்தத்தையே நாடவேண்டும். அந்த நாட்டம் சிலருக்குக் குர்பானியாகவும், சிலருக்கு அகீகாவாகவும் இருக்கலாம்.
ஏழு பேர்களில் ஒருவர் இறைச்சிக்காக சேர்ந்தால் அந்த ஏழு நபர்களின் குர்பானியும் கூடாது
ஏழு பேர்களில் ஒருவர் ஹரமான பணத்தில் சேர்ந்தால் அந்த ஏழு நபர்களின் குர்பானியும் கூடாது
கூட்டு குர்பானிப் பிராணியின் வயது கவனிக்கபட வேண்டும் தோல் கவனிக்கபட வேண்டும் தொழுகைக்கு பின் அறுக்கபட வேண்டும்
பொதுவாக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவன் உண்பதும், பிறருக்குக் கொடுப்பதும் முஸ்தஹப் . எனினும் அதனை மூன்றுபாகங்களாகப் பிரித்து ஒன்றை தர்மம் செய்வதும்,ஒரு பாகத்தை உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்குவதும், ஒருபாகத்தை தனக்காக வைத்துக் கொள்வதும் நல்லது. ஏழை, பணக்காரன், முஸ்லிம், ஹனபிமதஹபின் படி கொடுப்பது கூடும் முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடின்றிக் கொடுக்கலாம்.
ஷாபி மத்ஹபின் படி குர்பானி கறியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுப்பது கூடாது.
அனைத்தையும் தர்மம்செய்வதும் , தானே எ டுத்துக் கொள்வதும் ஆகுமென்றாலும், அவனது குடும்பம் பெரியதாகவும், ஏழையாகவுமிருந்தால் மொத்தத்தையும் தானே எடுத்துக் கொள்வதே ஏற்றமாகும்.
ومن السنّة أن لا يأكل المضحي شيئا يوم النحر حتى يضحي فيأكل من أضحيته ، فقد روى
الدّارمي عن أَبِي موسى الأشعريّ رضي الله عنه أنّ النبيّ صلّى الله عليه وسلّم كان يفعل.
உள்ஹிய்யா கொடுப்பவர் தான் கொடுத்த உள்ஹிய்யாவிலிருந்து அன்றைய முதல் உணவை உட்கொள்வது தனித்த சுன்னத் ஆகும். ஏனெனில், நபி {ஸல்} அவர்கள் அவ்வாறே சாப்பிட்டு இருப்பதாக அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் தாரமீ (ரஹ்) தங்களது தாரமீயிலே ஒரு ஹதீஸை பதிவிட்டு இருக்கின்றார்கள்
குர்பானி தோலின் சட்டம் என்ன?
குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.அல்லது ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம். விற்பது கூடாது.அப்படி விற்பனை செய்து விட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு சதகா செய்துவிடுவது கடமையாகும். அறுப்பவருக்கு கூலியாககொடுக்கக் கூடாது.
தோலை யாருக்கு கொடுப்பது கூடாது?
1. மஸ்ஜித் கட்டடப் பணி, மராமத்து பணிகளுக்காகவும், 2.அறுத்து உறிப்பவர், உதவியாளர் ஆகியோருக்கு ஊதியமாகவும், 3.முஅத்தின், இமாம் ஆகியோருக்கு சம்பளமாகவும் கொடுப்பதுகூடாது.
மதரஸாவின் கட்டுமானப்பணி, மராமத்துப்பணிக்கோகொடுக்காமல் அங்கு பயிலும் மாணவர்களுக்காக கொடுக்கலாம். பள்ளிவாசலில் பைத்துல்மால் எனும் அமைப்பு இருந்து அதன் மூலம்ஏழை, எளியவருக்கு உதவிகள் கொடுக்கப்படும் என்றிருந்தால் கொடுக்கலாம்.
குர்பானி கொடுப்பவர்தானே பிராணியை அறுப்பது சிறந்தது.
குர்பானி கொடுப்பவரோ, அல்லது வேறு நபரோ அறுக்கலாம். அறுக்கத் தெரியாவிட்டால் அல்லது வேறு காரணத்தால் அறுக்க முடியாமல் போனால் மற்றவர்களை வைத்து அறுக்கலாம். நூல். பதாவா ஹிந்தியா
இருந்தாலும் தானே அறுக்க முயற்சி செய்ய வேண்டும். காரணம் அது நபியின் சுன்னத். ஹதீஸில் குர்பானி பிராணியை நபி (ஸல்) அவர்கள் தன் கரத்தால் அறுத்ததாக வந்துள்ளது.
عَنْ أَنَسٍ قَالَ ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَ
வெள்ளை நிறத்தில் கருப்பு கலந்த கொம்புள்ள இரு ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். தனது கரத்தால் அவ்விரண்டையும் அறுத்தார்கள். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவற்றின் கழுத்தில் தம் காலை வைத்தார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3975)
அறுக்கும்போது பேண வேண்டிய விஷயங்கள்.
பிராணியை வலது புறம் படுக்க வைத்து . அதன் முகம் கிப்லாவின் பக்கம் இருக்க வேண்டும். மேலும் அதன் கால்கள் கட்டப்பட வேண்டும் பின் இந்த துஆ வை ஓதவேண்டும்.
إِنِّي وجهت وَجْهي للَّذي فطر السَّمَوَات وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِيوَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أَمَرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ ثُمَّ ذَبَحَ»
பின்னர் அங்கு நின்று கிப்லாவைமுன்னோக்கி கைகளை உயர்த்திகீழ்காணும் துஆவை ஓத வேண்டும்.
அல்லாஹும்ம தகப்பல் மின்னீ கமாதகப்பல்த்த மின் கலீலிக்க ஸையிதினாஇப்றாஹிம வ மின் ஹபீபிக்கஸையிதினா முஹம்மதின்ஸல்லல்லாஹு அலைஹி வ அலாஆலிஹீ வ அஸ்ஹாபிஹி வ பாரிக் வஸல்லிம்.
பிராணியை அறுத்த பின் எதுவரை முழுமையாக உயிர் பிரியவில்லையோ. உடலின் அசைவுகள் பூர்த்தியாக நிற்கவில்லையோ. அதுவரை தோலை உரிப்பது . தலையை தனியாக எடுப்பது. உடலின் மற்ற பாகங்களை வெட்டுவது (மக்ரூஹ்) வெறுக்கதக்கதாகும்.
சுருக்கமான மஸாயில் * ஸதக்கத்துல் பித்ரு கடமையானவர்களின் மீது குர்பானி வாஜிபாகிவிடும்.
* வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஸதக்கத்துல் பித்ரு கடமையாகும். அளவு வசதி இருந்தால், அதை * தனித்தனியாகக் கணக்கிட்டு, தனித்தனியாக ஒவ்வொருவருக்காகவும் குர்பானி கொடுக்க வேண்டும்.
* ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஆண், பெண் இரு இனங்களையும் குர்பானி கொடுக்கலாம்.
* வேறு விலங்கினங்களை குர்பானி கொடுக்கக் கூடாது.
* ஆடு ஒருவருக்காகவும், மாடு, ஒட்டகம் போன்றவற்றை ஏழு நபர்கள் கூட்டாக குர்பானி கொடுக்கலாம்.
* ஆட்டை குர்பானி கொடுக்கும் போது, அதில் அகீகா என்ற நிய்யத் சேர்ந்திருந்தாலும் குர்பானி கொடுக்கலாம்.
* குர்பானி பிராணியை தானே அறுப்பது சிறந்தது.
* குர்பானி பிராணியின் முடியை வெட்டக் கூடாது.
* குர்பானியின் இறைச்சியை அவரே வைத்துக் கொள்ளலாம். என்றாலும், அதை மூன்று பங்கிட்டு, ஒன்றை தனக்கும், * இன்னொன்றை உறவினர்களுக்கும், இன்னொன்றை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பது சிறப்பு.
* குர்பானியின் தோலை சொந்தமாகப் பயன்படுத்தலாம். அதை விற்றால் அதை தர்மம் செய்துவிட வேண்டும்.
* ஹனபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை 12.ம் நாள் சூரியன் மறையும் வரை.. ஷாபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை 13 ம் நாள் சூரியன் மறைவதற்குள் குர்பானிகொடுத்தல்
Comments
Post a Comment